வியாழன், 30 நவம்பர், 2017

படித்தில் பிடித்தது.....

                                                                 
                                

தன் தோள்களில் தாங்கியதை இறங்குவதே இல்லை கடைசிவரை....... சுகமாய் பயணித்ததை உணரும் தருணம் எப்போது .......                தஞ்சையில் இருந்து சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, 
“ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)
அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)
மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.
ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.
ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.
மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.
ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.
அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.
அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.
அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.
“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.
அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.
அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.
அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.
அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.
மறுநாள் காலை.. அலுவலகத்தில்
இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.
இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.
செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.
அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான் என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.
முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.
யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.
ஆனால், அப்பாக்கள் வரம்...
  

30 கருத்துகள்:

 1. மனம் கனமாகி விட்டது படித்தவுடன்...

  இன்று பெற்றோர்களை புரிந்து கொள்ளும் பிள்ளைகள் அரிதாகி விட்டதே...

  கணினிக்கு வராமல் இன்னும் தங்களது பழைய பதிவுக்கே ஓட்டு அளிக்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை படித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜி

   நீக்கு
 2. அப்பாக்கள் அப்பாக்கள்தான் ..எனக்கும் பிடித்தது .பகிர்வுக்கு நன்றி பூவிழி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை படித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அஞ்சு

   நீக்கு
 3. உள நிறைவைத் தரும் அருமையான பகிர்வு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை படித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோ

   நீக்கு
 4. உண்மையில் இது உண்மை நிகழ்வோ.. மனதை நெகிழச் செய்து விட்டது, ஆனா சில பிள்ளைகள் இப்படிக் கொஞ்சமும் மனச்சங்கடம் இல்லாமல் பெற்றோரோடு விளையாடுவார்கள் பணம் பறிப்பார்கள்.. அது எப்படித்தான் அவர்களால் முடிகிறதோ எனத்தான் எனக்கு எண்ணத் தோணும்...

  நான் இப்படி எல்லாம் எதுக்குமே பொய் சொல்ல மாட்டேன்ன்.. உண்மை சொல்லியே கேட்பேன், இல்லை ஜோக்குக்காகச் சொல்லிட்டாலும்.. அடுத்த நிமிடமே அது ஜோக் எனச் சொன்னால்தான் மனம் மாறும்...

  ஒரு வேளை ஆண் பிள்ளைகளில் அதிகம் இப்படிக் குணம் இருக்கிறதோ என்னமோ..

  நானும் என் மனதில் வைத்திருக்கும் வாசகங்களில் இதுவும் ஒன்றுதா... “துன்பம் வரும்போது சிரி”:).. இதைப் பல இடங்களில் கையாண்டும் இருக்கிறேன்ன்.. உண்மையில் மனப்பாரம் குறையும்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை படித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அதிரா

   நீக்கு
 5. எங்கள் இருவரின் கருத்தும் இது..பதிவை ரசித்தோம். மனம் னெகிழ்ந்தும் விட்டது ஆனால்..ப்ளீஸ் சகோதரி/பூவிழி பிள்ளைகள் பெற்றோருக்கு "சின்" இல்லை. அப்படிப் பார்த்தால் வைஸ் வெர்ஸா என்றும் சொல்லலாம்...எங்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் ரொம்ப நலல்வர்கள் பெற்றோரைத் தங்களுடன் வைத்துக் கொள்ள ஆசைபப்டுகிறார்கள். அதுவும் மிகவும் பாசத்துடன்...வந்த மருமகள்களும் சரி, மாப்பிள்ளைகளும் சரி ஆனால் பெற்றோர் அதெல்லாம் சரிப்பட்டுவராது எங்களுக்குப் பிள்ளைகளுடன் இருக்க விருப்பமில்லை என்று தநியாக நானா நானியில் இருக்கிறார்கள். பிள்ளைகள் ரொம்பவும் வருந்துகிறார்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாத்தா பாட்டி அன்பு கிடைக்க மாட்டேங்குதே என்று....ஸோ அது புரிதல் இல்லாத பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் மட்டுமே! இந்த சின் என்பதெல்லாம்... அல்லாமல் அப்பாக்களும் வரமே...பிள்ளைகளும் வரமே!!! நாம் பாசிட்டிவாகவே நினைப்போமே!! பிள்ளைகள் சின் அல்ல வரம் என்றே..ஏனென்றால் அப்படி சின் என்றாவது வளர்ப்பு முறையில்தானே அல்லாமல் நல்ல புரிதல் அன்பு இருந்தால் நிச்சயம் இருவருமே ஒருவருக்கொருவர் வரமாகத்தான் இருப்பார்கள்....இல்லையா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை படித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சகோ துளசி

   நீக்கு
 6. இதில் சொல்லப்பட்டிருக்கும் மகன் நிச்சயமாக நல்லதொரு தகப்பனாக வருவான். தன் தகப்பனையும் வரமாய்த்தான் நினைப்பான் தானும் வரமாகத்தான் இருப்பான். ஏனென்றால் அந்த அப்பா ஒரு எக்ஸாம்பிளாக இருப்பதால்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை படித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா சிஸ்

   நீக்கு
 7. உண்மைதான் அப்பா வரம்தான்.
  அப்பா என்றால் அன்பு.
  நான் அப்பாவின் செல்ல பெண்.
  அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை படித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதி சிஸ்

   நீக்கு
 8. பதில்கள்
  1. பதிவை படித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ராஜி

   நீக்கு
 9. அப்படி ஒரு அப்பா எனக்கு கிடைக்கவில்லை படிக்கும் போது அழுகைதான் வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை படித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி truth மனசிலும் இவ்வளவு பாரமா வருத்தமாக உள்ளது

   நீக்கு
 10. மிக நல்ல பகிர்வு. எழுதியது யார் என்று சொல்லியிருக்கலாம். சுதாங்கன்? முட்டிக்கொண்டு வந்த அழுகையை அவர் கட்டுப்படுத்திக்கொண்டு விட்டார். கலங்கும் என் கண்களை என்னால் கட்டுப்படுத்த முடையவில்லையே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை படித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, மன்னிக்கவும் மறந்துவிட்டேன் நண்பரே எப்போவோ எனக்கு பிடித்தது என்று எழுதிவைத்திருந்தேன் படித்ததை இனி இதுமாதிரி எழுதும் போது கவனமுடன் எழுதி வைக்கிறேன் எதிலே யாருடையது என்று

   நீக்கு
 11. பதில்கள்
  1. வாங்க சகோ பதிவை படித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

   நீக்கு
 12. எங்கேயோ படித்தது அப்பா தன் தோளின் மீதேற்றி கடவுளைக் காண்பித்தார் அப்போது தெரியவில்லைகடவுளெ தன் தோள்மீதேற்றி கடவுள் சிலையைக் காண்பித்தார் என்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சார் முக்காவாசி எல்லா அப்பாக்களும் இதை செய்திருப்பார்கள் பதிவை படித்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

   நீக்கு
 13. எல்லோருக்கும் பிடித்தது இந்த பதிவு நெகிழ்வை கொடுப்பதும் சில நேரங்களில் உண்மையை உணர்த்துவதும் மறுக்க முடியாதாகிவிடுகிறது

  எனக்கும் இதை படித்த போது அழுகை வந்தது பின்னோக்கி பயணிக்க வைத்தது இந்த மாதிரி எங்காவது கஷ்டம் கொடுத்திருக்கிறோமா என்று என் அம்மாவிடம் கேட்டேன் இல்லை சின்ன சின்னதாய் கொஞ்சம்கோப படுவாய் மற்றபடி உன் மேல் எந்த குறையுமில்லை எனக்கு என்று சொன்னார்கள் மனசு அப்போதான் திருப்தி ஆயிற்று

  துளசிசகோ /கீதா சிஸ் நிச்சியமாய் பிள்ளைகள் எல்லோருமே எப்போதுமே சின் ஆகிவிடமாட்டார்கள் சில நேரம் இப்படி நடக்கிறது அவர்களும் ஒரு நேரம் அப்பாவாவார்கள் அப்போது கண்டிப்பாய் புரியும் தன் செயலின் வலி.

  பதிலளிநீக்கு
 14. அப்பாக்களை இழக்கும் போதுதான் அவர்களின் அருமை புரிகிறது பலருக்கும்..மனதைத் தொடும் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நல்வரவு ,உண்மை இழந்த பின்பே பலவற்றையும் உணர்கிறோம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 15. இன்றுதான் இப்பதிவைப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன். இது அக்டோபர் 28, 2017இல் என் நண்பர் திரு டி.வி.எஸ்.சோமு (பத்திரிக்கையாளர்)தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அப்பா அதிகாரம் என்ற துணைத்தலைப்பில் இரண்டாவது பதிவாக எழுதியது. அவர் இப்பதிவில் குறிப்பிட்டுள்ள, அவருடைய தந்தையார் திரு அழகிரி விசுவநாதன் தஞ்சாவூரில் உள்ளார். மிகச் சிறந்த எழுத்தாளர். பல நூல்களை எழுதியுள்ளார். அண்மையில்கூட நான் அவரைச் சந்தித்துவிட்டு வந்தேன். பழகுவதற்கு இனியவர். இவரைப் பற்றி விக்கிபீடியாவில் (அழகிரி விசுவநாதன்) எழுதியுள்ளேன். உங்களுக்குத் தகவலுக்காக இதனைத் தெரிவிக்கிறேன். நல்ல செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சார் மிக்க நன்றி யாருடையது என்று குறிப்பிட்டதற்கு நான் வாட்ஸ் அப்பில் இதை படித்து எழுதி கொண்டேன் பகிர்வதற்க்காக அதனால் யாரென்று நண்பர் ஸ்ரீராம் கேட்ட பொழுது என்னால் யாரென்று அடையாளம் காட்டிட முடியவில்லை மிகவும் நன்றி சிறந்த எழுத்தாளரையும் அறிமுகபடுத்தியத்தியதற்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
  2. டி வி எஸ் சோமு அவர்களுக்கு முகநூலில் நானும் நட்பே. அங்கு படிக்கவில்லை. நானும் தஞ்சாவூர். அவர் ப்ளேக் ஸ்கூல் என்று நினைக்கிறேன். நான் தூய அந்தோணியார்.

   நீக்கு