ஞாயிறு, 20 ஜனவரி, 2013

கூகுல் நாலெட்ஜ் கிராஃப் - வியக்க வைக்கும் புதிய வசதி!

'ராஜா' என்று இணையத்தில் தேடுகிறோம் என்றால், அது ராஜ ராஜ சோழனா அல்லது இளையராஜாவா இல்லை ஏ.எம் ராஜாவா, இல்லை என்றால் ஆ.ராசாவா?

இது போன்ற கேள்விகளுக்கான விடையை தேடல் முடிவாக அளிக்கும் புதிய வசதியை தான் முன்னணி தேடியந்திரமான கூகுல் அறிமுகம் செய்துள்ளது.'கூகுல் நாலெட்ஜ் கிராஃப்' என்று குறிப்பிடப்படும் இந்த வசதி, தேடலில் அடுத்த அத்தியாயம் என்று வர்ணிக்கப்படுகிற‌து.தேடல் கலையை மேலும் புத்திசாலித்தனமானதாக மாற்றக்கூடியது என்றும் கருதப்படுகிறது.

தேடியந்திர உலகில் கூகுல் எப்போதோ நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டாலும், தன்னை நாடி வருபவர்களின் தேடல் அனுபவத்தை மேம்படுத்தித் தரும் வகையில் இன்னும் சிறப்பாக தேடல் முடிவுகளை வழங்க முயன்று கொண்டே இருக்கிறது கூகுல். புதிய புதிய வசதிகளையும் அம்சங்களையும் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் கூகுலின் லேட்டஸ்ட் அறிமுகம் நாலெட்ஜ் கிராஃப் வசதி.


உலகில் உள்ள பெயர்கள்,மனிதர்கள் மற்றும் இடங்கள் பற்றியெல்லாம் கூகுல் சேகரித்து வைத்திருக்கும் தகவல் களஞ்சியம் தான் இந்த கிராஃப். இப்படியாக 50 கோடிக்கும் மேற்பட்ட விஷயங்கள் குறித்து 350 கோடிக்கும் மேற்பட்ட தகவல்களை தனது டேட்டாபேசில் கூகுல் சேகரித்து பகுத்து வைத்திருக்கிறது.

இணையவாசிகள் தேடலில் ஈடுபடும் போது இந்த தகவல் களஞ்சியத்தை கொண்டு அவர்கள் எதிர்பார்க்காத வகையில், ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் தகவலை முன்வைத்து வியக்க வைக்கிறது கூகுல்.அதாவது இணையவாசிகள் என்ன தேடுகின்றனர் என்பதை கூகுல் புரிந்து கொண்டு அதற்கேற்ற தகவல்களை பரிந்துரைக்கிறது. பிரதான தேடல் பட்டியலுக்கு வலது பக்கத்தில் இந்த தகவல்கள் தோன்றுகின்றன.

தேடல் உலகில் இது புதிய உத்தியாக அமைந்துள்ளது. காரணம் இதுவரை கூகுல் உள்ளிட்ட எல்லா தேடியந்திரங்களும் இணையவாசிகள் தேடுவதற்கு பயன்படுத்தும் குறிச்சொல்லுக்கு பொருத்தமான இணைய பக்கங்களை பட்டியலிடுகின்ன்றன. கூகுல் இந்த பணியை விரைவாகவும் துல்லியமாகவும் செய்வதாக கருதப்படுகிறது.
ஆனால் தேடலில் ஒரு சின்ன பிரச்னை இருக்கிறது. உதாரணத்திற்கு ஒருவர் 'தாஜ்மகால்' என்னும் சொல்லை தேடுகிறார் என்று வைத்து கொள்வோம்.அவர் தேடுவது அழியா காதலின் அடையாளமாக விளங்கும் காதல் நினைவு சின்னமான தாஜ்மகாலாக இருக்கலாம், அல்லது 'தாஜ்மகால்' என்னும் பெயரிலான பாப் பாடகராக இருக்கலாம். 'தாஜ்ம‌கால்' என்னும் பெயரில் ஓட்டலும் இருக்கிறது. இவற்றில் குறிப்பிட்ட அந்த இணையவாசி தேடுவது எதனை?

இப்போதுள்ள நிலையில் தேடியந்திரங்கள் இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'தாஜ்மகால்' என்னும் சொல் தொடர்பான பக்கங்களை எல்லாம் கைகாட்டுகின்றன. அவற்றில் இருந்து இணையவாசிகளாக தேர்வு செய்து கொள்ள வேண்டும். அல்லது தேடும் போதே துணை குறிச்சொற்களை பயன்படுத்த வேண்டும்.

ஆனால் கூகுல் நாலெட்ஜ் கிராஃப் இது போன்ற நேரங்களில் தானே இணையவாசி சார்பில் ஊகித்து அவரது தேடலுக்கான பரிந்துரையை முன்வைக்கிறது. தாஜ்மகாலை பொருத்தவரை 'தாஜ்மகால் என்பது வரலாற்று நினைவு சின்னம். அது இந்தியாவின் ஆக்ராவில் உள்ளது' போன்ற அடிப்படையான விவரங்களை கூகுல் சட்டென்று தேடல் முடிவின் வலது பக்கத்தில் தருகிற‌து.

இந்த விவரங்கள் தாஜ்மகால் பற்றிய சுருக்கமான அறிமுகமாக விளங்குகின்றன.ஒரு ஒற்றை பார்வையில் தாஜ்மகால் பற்றி இதன் மூலம் தெரிந்து கொண்டு விடலாம்.

இணையவாசி தேடி வந்த தாஜ்மகால் இது தான் என்றால் இந்த பக்கத்தில் க்ளிக் செய்தால் போதும், தாஜ்மகால் பற்றி எல்லாவற்றையும் அறிந்து கொள்ள‌லாம்.

இதை இன்னும் சரியாக புரிந்து கொள்ள 'ராஜா' என்னும் பொதுவான தேடலோடு பொருத்தி பார்க்கலாம். ராஜா என்றால் அது மன்னர் ராஜ ராஜ சோழனாக இருக்கலாம். இசை பிரியர்களை பொருத்தவரை இளையராஜாவாக இருக்கலாம். பழைய பாடகர் ஏ.எம்.ராஜாவாகவும் இருக்கலாம். ஸ்பெக்ட்ரம் ராஜாவாகவும் இருக்கலாம்.

கூகுல் இதனை புரிந்து கொண்டு 'ராஜா' என்று தேடும் போது அதற்கேற்ற விவரங்களை முன் வைக்கிறது. இணையவாசிகள் தங்கள் தேர்வுக்கு பொருத்தமாக இருந்தால் அதனை பயன்படுத்தலாம்.

அதே போல பிரபலமான மனிதர்கள் பற்றி தேடும் போது அந்த மனிதர்கள் தொடர்பான அறிமுக விவரங்கள் கூகுல் தருகிறது. இடங்கள் பற்றிய விவரங்களும் இதே போல முன்வைக்கப்படுகின்றன.

திரை நட்சத்திரங்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நடித்த படங்கள் உள்ளிட்ட விவரங்களும் தரப்ப‌டும். எழுத்தாளர் எனில் அவர்கள் எழுதிய புத்தகங்கள், வாங்கிய விருதுகள் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

எனவே இணையவாசிகள் சுலபமாக தாங்கள் தேடும் தகவல்களை பெற்று விடலாம்.

விக்கிபீடியா போன்ற தகவல் பெட்டகங்களில் இருந்து இந்த தகவல்க‌ள் திரட்டப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.

மனிதர்கள் அல்லது இடங்கள் தொடர்பாக தேடும் போது இந்த பரிந்துரையை காணலாம்.
கூகுல் நாலெட்ஜ் கிராஃப் மூலம் அடிப்படை தகவல்கள் முன் வைக்கப்படுவதோடு, தேடல் தலைப்பு தொடர்பான சுவாரஸ்யமான விவரங்களும் இடம் பெறுகின்றன. உதாரணத்திற்கு 'மேரி கியூரி' என தேடினால் நோபல் பரிசு வென்ற மேடம் கியூரி பற்றிய அறிமுகம் வருவதோடு 'கியூரியின் கணவரும் ஒரு நோபல் விஞ்ஞானி' போன்ற தகவலகளும் அளிக்கப்படுகின்ற‌ன.

இவையெல்லாம் வெறும் உதாரணங்கள் தான். தேடலில் ஈடுபடும் போது அவரவர் தேவைக்கேற்ப பல வியப்புகளை கூகுலில் சந்திக்கலாம்.

காரணம் தேடுபவர் என்ன தேட விரும்புகிறார் என்பதை அவர் டைப் செய்வதில் இருந்தே புரிந்து கொள்ள வேண்டும் என கூகுல் விரும்புகிறது. அதற்கான முதல் படியாக தான் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் ஒருவரின் கேள்வியை அப்படியே புரிந்து கொண்டு அதற்கேற்ற பதிலை நெத்தியடியாக தர வேண்டும் என்பதே கூகுல் நோக்கமாக உள்ளது.

அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த வசதி முதல் கட்டமாக ஆங்கிலம் பேசும் இணையவாசிகள் மத்தியில் உலா வர உள்ளது.

கூகுல் நாலெட்ஜ் கிராஃப் பற்றி கூகுல் வலைப்பதிவி தரும் விவரம் :http://googleblog.blogspot.in/2012/05/introducing-knowledge-graph-things-not.html
                                      thanks to http://youthful.vikatan.com

4 கருத்துகள்:

 1. நான் முதன் முறையாக உங்கள் வலைப் பக்கம் வருகிறேன்.

  அருமையான தகவல். இது இப்பொழுது இருக்கும் வசதியா? அல்லது இனிமேல் தான் அமலுக்கு வருமா?

  பகிர்வுக்கு நன்றி.

  நட்புடன்,
  ராஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தோழி என் வலைப்பூவை பார்வையிடதற்க்கு உங்களின் வார்த்தைகள் எல்லாம் உற்ச்சகத்தை தருகின்றன .

   நீக்கு