ஞாயிறு, 20 ஜனவரி, 2013

புரியாது பூசணிக்கா! - சிறுகதை

 கனம் உள்ள கதை பெருங்கதையை  சிறுகதையாய்  அருமை ....................


அந்த ஆல்பத்தைப் புரட்டியதும் சந்தோஷம் என்னை தொட்டிலில் இட்டு ஆட்டியது போல் தோன்றியது. சில நினைவுகள் தரும் சந்தோஷத்தை எந்தப் பணத்தாலும் விலைக்கு வாங்கவே முடிவதில்லை. ஆல்பத்தை மூடியதும் ஏனோ எனக்கு இன்றைக்கு இந்திராகாந்தி ஞாபகமாகவே இருந்தது.

நான் வால்பாறையில் ஏழாம் வகுப்புப் படிக்கும் போது ஸ்கூல் வானொலி பெட்டியில் இந்திராகாந்தியை சுட்டுவிட்டதாகச் சொன்னதும் பள்ளிக்கு விடுமுறை விட்டார்கள். தெருவெங்கும் அவரை எப்படி சுட்டார்கள், யார் சுட்டார்கள் என்பதை கையில் ரேடியோ பெட்டியை வைத்துக்கொண்டு அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த காட்சி இன்னும் கூட மனதில் அழியாமல் பதிந்திருக்கிறது.
பள்ளி மாறுவேஷப் போட்டியில் இரண்டுமுறை இந்திராகாந்தி மாதிரி வேஷம் போட்டு பரிசு வாங்கியிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ நானே இந்திராகாந்தி ஆனது போல் அலட்டிக் கொண்டதும் உண்டு.
என் பள்ளி நாட்களில் காரணமே தெரியாமல் இந்திராகாந்தி மேல் ஒரு பெரும் ஆசை இருந்தது. அந்த ஆசையின் காரணமாய் இந்திராகாந்தி பற்றி வரும் செய்திகளை எல்லாம் 'கட்’ செய்து சேகரித்து, ஒரு பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்திருந்தேன். அந்த பொக்கிஷத்தில் குழந்தை பிரியதர்ஷினி, பள்ளிக்குப் போகும் பிரியதர்ஷினி, அம்மா கமலாவுடன், தாத்தா மோதிலால் உடன்... வளர்ந்த இந்திராகாந்தி, காதல் கணவர் ஃபெரோஸ் காந்தியுடன், பிரைம் மினிஸ்டர் இந்திராகாந்தியாக, மாமியார் இந்திராவாக, அழகுப் பாட்டி இந்திராவாக என பல விதமான பேப்பர் கட்டிங்குகள் இருந்தன. நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது சேர்க்க ஆரம்பித்த பழக்கம் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை இருந்தது. கல்லூரிக்காக அண்ணாமலை பல்கலை கழகத்துக்கு சென்ற போது எனக்கே தெரியாமல் அந்த பழக்கம் என்னை விட்டுப் போய்விட்டது.
ஆனால் நான் இதற்காக மெனெக்கெட்டு அலையும் போதெல்லாம் என்னை ரொம்ப கிண்டலடிப்பான் சண்முக சுந்தரம்.. என் தோழன், வழிகாட்டி, சில சமயங்களில் பகைவன்... ஆக மொத்தத்தில் யாதும் ஆனவன்! வால்பாறை மாதிரியான மலைபிரதேசத்தில் பள்ளிக்கு செல்வது என்பது என்பது கடுமையான விஷயம். நாங்கள் குடியிருந்த வீட்டிலிருந்து பள்ளி மூன்று கிலோ மீட்டர். போக வர ஆறு கிலோ மீட்டர் தூரத்தை பேசிப் பேசியே கடப்போம் நாங்கள் இருவரும். மலை மேட்டிலும் சரிவிலும் ஏறி இறங்குவது தினம் தினம் யாத்திரை செல்வதற்கு சமம். ஒண்ணாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை நாங்கள் இருவரும் சேர்ந்து நடக்க நடக்க எங்கள் நட்பு 'வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி வளர்ந்தது.
அவன்தான் எனக்கு இந்திராகாந்தி பற்றி நிறையச் சொல்வான். காரணம் பலவிதமான புத்தகங்களை வாசிப்பான். அவனுடைய முதல் நேசமும் பாசமும் புத்தகங்கள்தான். நான் ஏழாவது படிக்கும் போது அம்பேத்கர் பற்றிய புத்தகம் கொடுத்தான். சண்முகம் கொடுத்தானே என்கிற ஒரே காரணத்துக்காக வாசிக்க முயற்சி செய்தேன்.. ஆனால் முடியவில்லை. திரும்ப அவனிடம் கொடுத்துவிட்டேன். புத்தகத்தை வாங்கியவன் என்னை 'அடி முட்டாள்.. உருப்படாத முண்டம்’ என்றெல்லாம் திட்ட, என் அழுகை ஆறாகியது. அதற்குப் பிறகு அவன் புத்தகம் கொடுப்பதை நிறுத்திவிட்டான்.
திரும்ப எட்டாவது கால் பரீட்சை விடுமுறையின் போது  ஒரு கனமான புத்தகத்தை கொடுத்தான், அட்டையில் 'வால்காவிருந்து கங்கை வரை’ என்று எழுதியிருந்தது. எனக்குப் பக்கத்தைத் திருப்பவே பயமாய் இருந்தது. 'படிக்க முடியாது’ என்று சொன்னால் திட்டுவான்.. என்ன செய்வது என்று புரியாமல் வாங்கிக் கொண்டேன். ஒருவாரம் கழித்து 'என்ன பூசணிக்கா படிச்சியா?’ என்று கேட்டபோது 'இல்லடா’ என்று சொல்ல வாய் எடுத்து படிச்சிட்டு இருக்கேன்டா'' என்று பொய் சொன்னேன். அவனுக்குத் தெரியும் அந்த  மாதிரி புத்தகங்களை எல்லாம் என்னால் படிக்க முடியாது, படிக்க வராது என்று.
ஒன்பதாவது படிக்கும் போது, இரு குடும்பத்தாரும் கோயமுத்தூருக்கு போயிருந்தோம். அவன் அவனுடைய அப்பாவிடம் அடம்பிடித்து என்னையும் சினிமாவுக்குக் கூட்டிப் போனான். எனக்கு 'ஏண்டா போனோம்’ என்றாகியது. ஆனால், அவனும் அவன் அப்பாவும் ஒரு தவம் போல் அந்தப் படத்தை ஆடாமல் அசையாமல்  உட்கார்ந்து பார்த்தார்கள். 'உமர் முக்தார்’ தான் அந்தப் படம்!
விடாது கருப்பாக மீண்டும் ஒரு புத்தகத்தைத் தந்தான். 'ராகுல் சாங்கிருத்யாயன்' எழுதிய 'காரணமும் காரியமும்’ என்ற அந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன், வேறு வழி.
நான் அவன் அளவுக்கு வாசிப்பில் வளர்ந்துவிட்டேன் என்று அவனாகவே கற்பனை செய்துகொண்டு மாதம் குறைந்தபட்சம் இரண்டு புத்தகங்களாவது தர ஆரம்பித்தான். அவன் கொடுத்த புத்தகங்களில் எனக்கு ஏனோ பிரமிள் கவிதைகள், ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள், சில சமயங்களில் ஜெயகாந்தனின் கதைகள் போன்ற ஒன்றிரண்டு எழுத்தாளர்களின் புத்தகங்கள் தான் வாசிப்பதற்குப் பிடிந்திருந்தது. ந.பிச்சமூர்த்தியின் 'மோகினி’ சிறுகதையைப் படித்துவிட்டு, அந்தக் கதையில் வரும் கதை நாயகன் போல் நானும் 'மோகினி என்னுடன் பேசுகிறாள்’ என்று சொல்லி கலவரப்படுத்தி, வீட்டில் இருப்பவர்களின் தூக்கத்தைக் கெடுத்த கதைகளும் உண்டு.
புத்தகங்களின் மீது இருந்த பயம் விலகி, வாசிப்பை நேசிக்கக் கற்றுக் கொண்ட கணத்திலிருந்து சண்முக சுந்தரம் எனக்கு நண்பன் என்ற எல்லைக்கோட்டை விட்டு வெளியேறி அறிவுஜீவி வட்டத்துக்குள் வந்ததாகத் தோன்றியது. பதினொன்றாம் வகுப்பிலிருந்து நானே சண்முகத்திடம் எனக்கு அந்த புத்தகம் கொடு, இந்தப் புத்தகம் கொடு என்று கேட்டு வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன்.
அப்படி அம்பேத்கர் பற்றிய புத்தகங்களையும் அவருடைய எழுத்துக்களையும் பேச்சுக்களையும்  படிக்கும்போது, 'நாமும் அம்பேத்கர் மாதிரி தீண்டாமைக்கு எதிராகப் போராட வேண்டும்’ என்று மனதுக்குள் சபதம் செய்தேன். ஆனால் கால ஓட்டத்தில் அதற்கு எதிராக ஒரு சிறு கல்லைக் கூட எறிய முடியாத சமூகக் கட்டமைப்பில் சிக்குண்டு இருக்கிறேன் என்று நினைத்த போது அவமானமாய் இருந்தது. அவமானத்தைத் துடைக்க என்ன செய்ய முடியும்...? சில நிமிடங்கள் கனத்த மௌனத்தின் ஊடே சிறு சொட்டுக் கண்ணீர் துளிகளை சிந்துவதை விட!
பள்ளிப் படிப்பை முடித்து, இருவரும் அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்தோம். அவனுக்கு அவனைப் போலவே நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அதனால் அவன் வாசிப்பின் உலகம் பரந்து விரிந்தது. 'பின் நவீனத்துவம்’, 'மேஜிகல் ரியலிஷம்’, 'சர் ரியலிசம்’ என்று எனக்கு ஆரம்பத்தில் புரியாத வார்த்தைகளை எல்லாம் பேசினான். என் கையிலும் காஃப்கா, ஆல்பர் காம்யு, இட்டாலோ கால்வினோ, ஃபோர்ஹே, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், பாப்லோ நெருடா என்று பலர் புரள ஆரம்பித்தார்கள். இவர்களை வாசிக்க வாசிக்க அவர்களின் மீது எனக்கு பேரன்பும் பெரும் காதலும் உண்டானது. சில இரவுகளை இவர்களுடன் கழித்ததும் உண்டு... நடுநிசி ரகசியக் கனவில்தான்!
புத்தகங்களின் காதலனாய் இருந்த சண்முகத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அநீதிக்கும் அராஜகத்துக்கும் எதிராகப் போராடும் பேராண்மையைக் கற்றுக் கொடுத்தது. நான் ஐந்து வருடங்கள் அந்த பல்கலைக் கழகத்தில் படித்து ஒரு முதுகலைப் பட்டத்துடன் வீட்டுக்குப் போனேன். அவன் அந்த ஐந்து ஆண்டுகளில் பல போரட்டங்களின் பெரும் போராளியாகிப் போனான். அதன் எதிரொலியாய் சிறைக்குச் சென்றான். தத்துவங்கள் பேசினான். அதற்குப் பிறகு அவன் என்னோடு வால்பாறைக்கு வரவேவில்லை. நானும் அவனும் சேர்ந்து நடந்த பொழுதுகளும், பேசிய வார்த்தைகளும் வெறும் நிழற்படங்களாய் என் நெஞ்சுக்குள் ஆணியடித்து மாட்டி வைக்கப்பட்டு விட்டது.
என் திருமணத்துக்கு அவனை ஆசையுடன் கூப்பிடச் சென்ற இடம் கடலூர் சிறை. எலும்பும் தோலுமாய் இருந்தான். அப்போதும் பையில் சில புத்தகங்களை வைத்திருந்தான். ''என்னடா புத்தகம் அது'' என்று கேட்டதற்கு ''உனக்கு அதெல்லாம் புரியாது பூசணிக்கா'' என்ற அவனது வார்த்தையில் ஏனோ ஒரு வெறுமை இருந்தது. அந்த வெறுமை என்னை கனமாய்க் குத்தியது அந்த நிமிடம். ஆனால், அது ஆறாத ரணமாய் என்னை பல காலம் துரத்தியது. ''ஏன் சண்முகம் அப்படி வெறுப்பாய் பேசினாய்?'' என்று கேட்பதற்கு வாய்ப்பே வரவில்லை.
இப்போது அவன் சார்ந்த இயக்கத்தில் டெல்லியில் இருப்பதாக அவன் அம்மா சொன்னார். ஆனாலும், அவன் ஏன் எனக்கு இது புரியாது  என்று சொன்னான் என்ற கேள்வியை மட்டும் அவனிடம் கேட்காமல் விட்டு விடக்கூடாது என்று மனதுக்குள் ஒரு சபதம் போட்டேன்.
என் மூத்த பையனுக்கு  அவன் பெயரை வைத்தேன். இப்போதும் புத்தகங்களை வாங்கும்போது, 'அவனுக்கு இந்த புத்தகம் பிடிக்குமா? இந்தப் புத்தகங்களையெல்லாம் நான் வாசிப்பதைப் பார்த்தால் சந்தோஷப்படுவானா..? நீ உருப்படுற முண்டம்தான் பூசணிக்கா’ என்று சொல்வானா என்றெல்லாம் எனக்கு நானே கேட்டுக் கொள்வேன். அதே சமயத்தில், ஏன் சண்முகம் அப்படி சொன்ன? என்றக் கேள்வியையும் கேட்க வேண்டும் என்று மீண்டும் உறுதி பூணுவேன்.
இரண்டாவது டெலிவரிக்கு அம்மா வீட்டுக்கு வந்திருந்த போது... ஒருநாள் அவன் வீட்டிலிருந்து அவன் அம்மாவும் அப்பாவும் உயிரைக் கொடுத்து அலறும் சத்தம். ஓடிப்போய் பார்த்தால், டிவியில் அவனை சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படத்தைத் திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த நிமிட அவனைப் பார்க்க வேண்டும் என்ற வெறியில் யார் சொல்வதையும் பொருட்படுத்தாமல் டெல்லிக்கு ஃபிளைட் பிடித்தேன்.
அவன் தங்கியிருந்த அறை முழுக்க புத்தகங்கள்... புத்தகங்கள்....புத்தகங்கள்...! 'இந்த பாவி மகன் எதுக்கு இப்படி படிச்சான்... இதுக்குத்தானா... இதுக்குத்தானா?’ என்று அவன் அம்மா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுது அரற்றிய போது எனக்கு ஆறுதலாய் சொல்வதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. ஒரு தாயைத் தேற்றும் வார்த்தைகள் எந்த மொழியில் முழுமையாக இருக்கிறது?
அவன் அம்மா நெஞ்சில் அடித்து அடித்து அழுததில் அவள் சாய்ந்திருந்த மேஜையில் வைக்கப்படிருந்த புத்தகங்கள் கீழே விழுந்தன. எடுத்து மேலே வைக்கலாம் என்று குனிந்து பொறுக்கியபோது ஒரு புத்தகத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து அலைந்து திரிந்து வாங்கிய இந்திராகாந்தியின் அரிய புகைப்படம். பார்த்ததும் அதிர்ந்தேன்.. அதிர்ந்தேன்... இந்திராகாந்தியின் தலையை கட் செய்து அதில் என்னுடைய புகைப்படத்தில் இருந்து வெட்டிய தலை ஒட்டப்பட்டிருந்தது.
புத்தகங்கள் பலரை அறிவாளி ஆக்குகிறது. வெகுசிலரை போராளியாக்குகிறது. ஒரு சிலரிடம் எந்த சலனத்தையுமேற்படுத்தாமல் கடந்து போய்விடுகிறது.... நானும் அந்த ஒரு சிலரோ என்று எண்ணிய கணம் உடைந்து அழுதேன்; அரற்றினேன்; கதறினேன்.
"அதெல்லாம் உனக்குப் புரியாது பூசணிக்கா!"
 நாச்சியாள்

2 கருத்துகள்:

  1. அருமை.....எந்த வித சலனமும் ஏற்படுத்தாத புத்தகங்கள்.....மனதை கனக்க வைத்த போராளி....யார் எழுதிய சிறுகதை இது....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரை கீழே கொடுத்து இருக்கிறேன் ராணிமா 'நாச்சியாள்' என்னை மிகவும் கனக்க வைத்தது

      நீக்கு